அதிகம் பழுத்துவிட்ட வாழைப்பழங்களை வீணாக்க மனமில்லை.வழக்கமாக வாழைப்பழங்கள் மீந்து விட்டால் அதை மசித்து,கோதுமைமாவு, சர்க்கரை, முட்டை சேர்த்து பேன் கேக் போல செய்வதுண்டு.ஃப்ரிட்ஜில் முன்பு வாங்கிய வெண்ணெய் கிடக்கவே இதை செய்து பார்ப்போம் என செய்தேன்.
டெக்ஸ்ச்சர் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லையென்றாலும் சுவையும் மணமும் அருமையாக இருந்தது.செய்வதற்கு மிகவும் சுலபமானது.
தேவையான பொருள்கள் :
பழுத்த வாழைப்பழங்கள் – 4
வெண்ணெய் – 250 g
சர்க்கரை – 200g
மைதாமாவு – 400g
முட்டை – 2
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
சோடா உப்பு – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
செய்முறை :
1.வாழைப்பழங்களை கரண்டி கொண்டு நன்கு கூழாக மசித்துக் கொள்ள வேண்டும்.மிக்ஸியில் அடிக்கக் கூடாது.
2.ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் + சர்க்கரையை போட்டு பீட்டரால்(ஹேண்ட் மிக்ஸர்) இரண்டு நிமிடம் அடிக்கவும்.
3.ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி பீட்டரால் நன்கு அடித்துக் கொள்ளவும்.
4.வெண்ணெய் சர்க்கரை கலவையில் அடித்த முட்டையை சேர்த்து பீட்டரால் கலக்கவும்.
5.அதில் பேக்கிங் பவுடர்,சோடா,உப்பு சேர்த்து பீட்டரால் கலக்கவும்.
6.அதில் வாழைப்பழக் கலவையை சேர்த்து பீட்டரைக் கொண்டு அடித்து கலந்துவிடவும்.
7.மைதாமாவை போட்டு கலக்கவும்.பீட்டரை உபயோகிக்கக் கூடாது.அகலமான கரண்டியைக் கொண்டு கலக்கவும்.கட்டியில்லாமல் எல்லா பக்கமும் கலவை ஒரே சீராக இருக்கும் அளவு கலந்துவிடவும்.
8.ஓவனை ஆன் செய்து ப்ரிஹுட் மோடில் வைக்கவும்.கேக் டின்னில் வெண்ணெய் தடவி சிறிது மைதாமாவு தூவி எல்லாபுறமும் மாவு பரவுமாறு செய்து மீதி மாவை தட்டிவிடவும்.
9.கலந்துவைத்த மாவுக்கலவையை கேக்டின்னில் பாதியளவு வருமளவு ஊற்றவும்.
10.250° யில் OTGயை 45 நிமிடத்திற்கு செட் செய்து உள்ளே வைக்கவும்.(மைக்ரோ அவன் எனில் கன்வெக்ஷன் மோடில் வைக்கவும்.)
11.நாற்பது நிமிடம் கழித்து கேக்டின்னை வெளியே எடுத்து பிரெட் வெந்துவிட்டதா என மெல்லிய கத்தியை நுழைத்துப் பார்க்கவும்.கத்தி க்ளீனாக வெளியே வந்தால் வெந்துவிட்டது என அர்த்தம்.இல்லையெனில் இன்னும் 5 நிமிடம் வைத்து எடுக்கலாம்.
12.கத்தி கொண்டு கேக்டின்னின் ஓரங்களில் விலக்கிவிட்டுத் தட்டினால் ப்ரெட் தனியாக வந்துவிடும்.ஆறியபின் துண்டுகள் போடலாம்.