கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு முன் ஜார்க்கண்டில் பக்கத்து ப்ளாக்கில் வசித்த விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெயா பாபியிடம் கற்ற ரெசிப்பி இது.
பேஸ்புக்கில் தொடர்பில் இருந்தாலும் பேசி நாளாகிவிட்டது,இன்று இந்த காஜாவை செய்தபோது நினைவில் உறுத்தியவாறே.
சற்றே சிரத்தையோடு செய்தால் அழகாக வரும்.சுவையாகவும் இருக்கும்.திகட்டுமளவு இனிப்பாக இல்லாமல் லைட்டாக இருக்கும் தின்பண்டம் இது.
தேவையான பொருட்கள் :
மைதாமாவு – 400g
சர்க்கரை – 200g
ரவை – 4 டேபிள்ஸ்பூன்
நெய் – 50
ஏலக்காய் – 4
சோடா உப்பு – அரை டீஸ்பூன்
கேசரி பவுடர் – அரை டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
எலுமிச்சம் பழம் – அரை பாகம்
பொரித்தெடுக்க எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
1.ஒரு பாத்திரத்தில் மைதாமாவு,ரவை, சோடா உப்பு,போட்டு ஒன்றாக கலக்கவும்.நெய்யை சூடாக்கி மாவு கலவையில் ஊற்றவும்.நன்றாக கலந்துவிடவும்.
2.கேசரி பவுடரில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றி மாவை நன்கு சப்பாத்திக்கு பிசைவது போல பிசையவும்.தளர பிசையக்கூடாது. பிசைந்த மாவு கெட்டியாக இருக்கவேண்டும்.மாவை மூடிவைக்கவும்.
3.அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு ஒரு க்ளாஸ் தண்ணீர் ஊற்றவும்.(200ml).கொதிக்கவிடவும்.நன்கு கொதித்து வரும்போது அரை மூடி லெமன் பிழிந்துவிடவும்.
4.சர்க்கரைப்பாகை ஒரு கம்பி பதம் வரும்போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.ஏலக்காயை தட்டி பாகில் போடவும்.
5.(ஒரு கம்பி பதம் என்பது சர்க்கரைப் பாகை கரண்டியில் எடுத்து ஆட்காட்டி விரலால் சிறிதளவு தொட்டு கட்டை விரலில் வைத்து அழுத்தி ஆட்காட்டி விரலை மெதுவாக விலக்கினால் இரு விரலுக்கும் நடுவே பாகு கம்பி போல இழுபடும் பதம்.படத்தில் காட்டியுள்ளது போல)
5.பிசைந்த மாவை பூரிக்கு உருண்டை பிடிப்பது போல சிறு சிறு உருண்டை பிடிக்கவும்.மாவு உபயோகிக்காமல் மெல்லியதாக பூரி போல தேய்க்கவும். தேவையென்றால் லைட்டாக விரல்களில் எண்ணெய் தொட்டுக் கொள்ளலாம்.
6.திரட்டிய பூரியில் சுற்றிலும் ஓரங்களை விட்டுவிட்டு கத்தியால் வரி வரியாகக் கீறவும்.
7.இரு விரல்கள் கொண்டு பூரியை ஒரு ஓரத்தில் இருந்து சுருட்டவும்.முழுவதும் சுருட்டி ஓரங்களை அழுத்திவிடவும்.
8.எல்லா உருண்டைகளையும் பூ போல சுருட்டி விட்டு,கடாயில் எண்ணெய்யை காயவைத்து ஆறு ஆறாக இட்டு பூரி பொரித்து எடுப்பது போல பொரித்து எடுக்கவும்.அதிகம் போட்டால் வடிவம் உடைந்து விடக்கூடும்.
9.பொரித்த காஜாக்களை பாகில் ஐந்து ஐந்தாக போட்டு பாகு எல்லா பக்கமும் படுவது போல பிரட்டி எடுத்து தட்டில் அடுக்கி ஒரு மணி நேரம் போல உலரவிடவும்.பிறகு டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளலாம்.ஒரு வாரம் வரை கெடாது.