இதுவும் அம்மா வழக்கமாக செய்யும் சைட்டிஷ்களில் ஒன்று.
காய்கறியை பொரியலாக செய்தால் சாப்பிடாத பிள்ளைகளும் இந்த கூட்டு வகையை விரும்பிச் சாப்பிடுவார்கள்.
இதே மெத்தடில் கத்தரிக்காய்/கருணைக்கிழங்கு/முட்டைக்கோஸ் என காய்கறி மாற்றிப் போட்டும் கூட்டு செய்வதுண்டு. காரக்குழம்பு,முட்டைக்குழம்பு,மீன்குழம்பு வகைகளுடன் சைட்டிஷ்ஷாகத் தொட்டுக் கொள்ள அருமையான காம்போ..
தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு – 400கிராம்
கடலைப்பருப்பு – 150 கிராம்/முக்கால் ஆழாக்கு
அப்பளம் – 10
சின்ன வெங்காயம் – 15
பெரிய தக்காளி – 1
பச்சைமிளகாய் – 4
தேங்காய் – 2 கீற்று
பெரியபல் பூண்டு – 5
பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை
மஞ்சள்தூள் – சிறிதளவு
கடுகு – அரை டீஸ்பூன்
உளுந்து – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை
நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
கடலையெண்ணெய் – அப்பளம் பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை :
1.கடலைப்பருப்பைக் கழுவி மஞ்சள்தூள்,பெருங்காயம் சேர்த்து வேகவைக்கவும்.குழைந்துவிடாமல்,
மசியும் பதத்தில் இறக்கிவைக்கவும்.
2.தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து வைக்கவும்.
3..உருளைக்கிழங்கை நன்கு தேய்த்து அலசிவிட்டு சின்னத்துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.தோல் சீவக்கூடாது.
4.கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து,காய்ந்தமிளகாய் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
சின்னத் துண்டுகளாய் வெங்காயத்தை நறுக்கிச் சேர்க்கவும்.சிறிது நேரம் வதக்கிவிட்டு நறுக்கிய தக்காளி,பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும்.
5.வெட்டிய உருளைக்கிழங்கை போட்டு உப்பு,அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
6.ஐந்து நிமிடம் கழித்து மூடியைத் திறந்து திருவிய தேங்காய்,வேகவைத்த கடலைப்பருப்பைச் சேர்க்கவும்.தண்ணீர் வற்றிவிட்டால் மேலும் சிறிது தண்ணீர் சேர்க்கவும்.மூடி வேகவிடவும்.
7.கிழங்கு குழையும் பதத்துக்கு வந்தவுடன் உப்பு சரிபார்த்து இறக்கவும் அப்பளத்தை பொரித்து துண்டுகளாக்கி கூட்டில் போட்டு நன்கு கலந்து விடவும்.
சப்பாத்திக்கு சைட்டிஷ்ஷாகவும் தொட்டுக் கொள்ளலாம்.
**அப்பளத்தை அவனில்/ஏர் ஃப்ரையரில் சுட்டும் உடைத்துப் போடலாம்.