பக்கத்துவீட்டில் வசிக்கும் பெங்காலி பாபி ஒரு நாள் இந்த டிஷ் செய்து தந்தார்கள்.அதன் சுவை மிகவும் பிடித்துப் போனதால் அவர்களிடம் ரெசிப்பி கேட்டு வாங்கி செய்து பார்த்தேன்.நன்றாகவே வந்தது.செய்வதற்கு ஈஸியானதும் கூட.
யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற்றிட இந்த ரெசிப்பியை பதிவேற்றுகிறேன்.
தேவையான பொருள்கள் :
கோதுமை மாவு : 200g/ஒரு ஆழாக்கு
வெள்ளை எள் : 2 டீஸ்பூன்
வேர்க்கடலை : 100g
வெல்லம் : 100g
பேரீச்சம் பழம் : 5
மிளகு :10 எண்ணிக்கை
ஏலக்காய் : 3
எண்ணெய் : 100g
உப்பு.
செய்முறை :
1.கோதுமை மாவை துளி உப்பு,ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து ,தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல நன்கு பிசைந்து மூடி வைக்கவும்.
2.எள்ளு, வேர்க்கடலையை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்.வேர்க்கடலை தோலை நீக்கிவிட்டு எள்ளு,மற்றும் மிளகு,ஏலக்காயை சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
3.பேரீச்சம்பழத்தை கொட்டையை நீக்கிவிட்டு மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
4.அரைத்த எள்ளு வேர்க்கடலை கலவை,பேரீச்சம்பழத்துண்டுகள்,பொடியாக உதிர்த்த வெல்லம் எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
5.ஐந்தாறு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும்.அழுத்திப் பிடிக்க வேண்டாம்.சற்றே தளர்வாகப் பிடிக்கவும்.அழுத்தி அழுத்திப் பிடித்தால் கோதுமை மாவின் உள்ளே வைத்து உருட்டும் போது மேல் மாவு பிய்ந்து போகும் வாய்ப்புள்ளது.
6.ஒரு சப்பாத்தி திரட்டும் அளவுக்கு கோதுமை மாவு ஒரு உருண்டை எடுத்து கிண்ணம் போல் குழித்து அதன் உள்ளே பூரண உருண்டை வைத்து எல்லா பக்கமும் நன்கு மூடி விடவும்.
7.சப்பாத்தி கட்டையில் மாவு தூவி திரட்டிய உருண்டையை வைத்து மென்மையாக சப்பாத்தி போல உருட்டிக் கொள்ளவும்.அழுத்தி அழுத்தி உருட்டக் கூடாது.
8.திரட்டிய பராட்டாவை தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றி இருபுறமும் சிவக்க வேக வைத்து எடுக்கவும்.விருப்பமுள்ளோர் எண்ணெய்க்கு பதிலாக நெய் உபயோகிக்கலாம்.
சுவையான ஸ்டஃப்ட் மீட்டா பராட்டா ரெடி.இரண்டு நாள் கூட வைத்து சாப்பிடலாம்.கெடாது.