சென்னாங்குன்னி என்பது பொடி இறால் வகையைச் சேர்ந்தது.இதனை உலரவைத்து உணவுவகைகளில் பயன்படுத்துவார்கள்.
கடலோர மாவட்டங்களில் வசிப்பவர்கள் விரும்பி உண்ணும் ஒரு பொடி வகை இது.பொதுவாக உளுந்து அரைத்து செய்யப்படும் சாதாரண இட்லிப்பொடியை விட உலர்ந்த சென்னாங்குன்னி சேர்த்தரைத்த பொடி சுவையும் மணமும் மிக்கது.
தேவையான பொருள்கள் :
உளுந்து – 200g (ஒரு ஆழாக்கு)
உலர்ந்த சென்னாங்குன்னி – ஒரு ஆழாக்கு
காய்ந்தமிளகாய் – 10-12
மிளகு – 1 tsp
சீரகம் – 1tsp
பூண்டு பல் – 10
உலர்ந்த கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு
செய்முறை :
1.உலர்ந்த சென்னாங்குன்னியில் கல், தூசு, தும்பு நீக்கி சுத்தம் செய்யவும்.
வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
2.கறிவேப்பிலை நீங்கலாக மற்ற அனைத்து பொருட்களையும் வெறும் வாணலியில் இட்டு சிவக்க வறுக்கவும்.கறிவேப்பிலையை கடைசியாக சேர்த்து சிறிது நேரம் வறுத்து இறக்கி ஆறவைக்கவும்.
3.அத்தனை பொருட்களையும் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைக்கவும்.
4.சென்னாங்குன்னியில் உப்பு இருக்குமென்பதால் முதலில் சேர்க்கக் கூடாது.அரைத்தபின் உப்பு ருசி பார்த்து தேவையெனில் சிறிது சேர்க்கலாம்.
5.நல்லெண்ணெய் கலந்து இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ளலாம்.
சுடுசோற்றில் பொடியும் நல்லெண்ணெயும் கலந்து பிசைந்து சாப்பிடலாம்.