மட்டன் பருப்புக்குழம்பு எங்கள் வீட்டில் பிரபலமான ஒரு யூனிக் ரெசிப்பி.. அம்மாவிற்கு பின் இதை செய்வதையே நெடுங்காலம் மறந்திருந்தேன்.என் மச்சினரின் மனைவி சமீபத்தில் ஒருமுறை இதை அருமையாக செய்திருந்தபோது திரும்பவும் நினைவுக்கு வந்துவிட்டது.
இதை மட்டன் தால்ச்சாவுடன் சேர்த்து குழப்பிக் கொள்ளவேண்டாம்.
தேவையான பொருள்கள்:
மட்டன் – 1/2 கிலோ
துவரம்பருப்பு – 100g
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
குழம்புமிளகாய்த்தூள் -4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
புளி – சிறிய எலுமிச்சையளவு
முருங்கை – 1
கத்தரிக்காய் – 1/4கிலோ
தக்காளி – 3
சின்னவெங்காயம் – 20
பச்சைமிளகாய் – 3
கறிவேப்பிலை -சிறிதளவு
கொத்துமல்லி – சிறிதளவு
இஞ்சிபூண்டுபேஸ்ட் – 2டீஸ்பூன்
கடுகு – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
சோம்பு – சிறிதளவு
நல்லெண்ணெய் – 50g
செய்முறை :
1.மட்டனை நன்கு கழுவி குக்கரில் போடவும்.துவரம்பருப்பு மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு முதலிவற்றையும் போடவும்.
2.ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி குக்கரில் பதமாய் வேகவைத்து இறக்கிவைக்கவும்.
3.புளியை ஊறவைக்கவும்.
4.முருங்கை கத்தரியை நறுக்கவும். வெங்காயத்தை உரித்துவைக்கவும்.
5.அடிகனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் சீரகம்,சோம்பை போடவும்.நறுக்கிய வெங்காயம் ,கறிவேப்பிலை ,கீறிய பச்சைமிளகாய் ,தக்காளி போட்டு வதக்கவும்.இஞ்சிபூண்டு பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும்..காய்களை சேர்க்கவும்.
6.சற்று நேரம் வதக்கிவிட்டு குழம்புத்தூள், உப்பு ,கரம்மசாலாவை போடவும்.இரண்டுகிளாஸ் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவிடவும்.
7.முருங்கை வெந்தபின் புளியைக் கரைத்து ஊற்றவும்.புளிப்பு சற்று கூடுதலாகவே இருக்கவேண்டும்.வெந்த மட்டன் மற்றும் பருப்பை சேர்க்கவும்.
8.சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
9.உப்பு சரிபார்த்து இறக்கிவிடவும். சுவையான மட்டன் பருப்புக்குழம்பு ரெடி. சோறு,இட்லி,தோசைக்கு சிறப்பாக துணைசேரும்.
*இக்குழம்பில் புளிப்பும் காரமும் சற்றே தூக்கலாக இருந்தால் அதிகம் ருசியா இருக்கும்.