மட்டனை பொதுவாக குருமா,க்ரேவி,புளிக்குழம்பு,வதக்கல், வறுவல்னு செய்வதே வழக்கம்.இந்த வறுத்தரைச்ச மிளகு குழம்பு அதிலிருந்தெல்லாம் சுவையில் வேறுபட்டது.மிளகு சீரகம் சேர்ப்பதால் உடல்நலத்திற்கு நல்லது. பனிக்காலங்களில் செய்ய ஏற்றது.
ஜலதோஷம் பிடிக்கும் நேரங்களில் செய்து உண்டால் சுவையற்ற நாக்குக்கு ஏதுவாக இருக்கும்.
தேவையான பொருள்கள் :
மட்டன் – அரை கிலோ
சின்ன வெங்காயம் -15
தக்காளி -2
பச்சைமிளகாய் – 4
தேங்காய் – அரைமூடி
கொத்துமல்லித்தழை – சிறிதளவு
மிளகாய்த்தூள்-1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
தனியா – 3 டேபிள்ஸ்பூன்
மிளகு – 3 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
இஞ்சிபூண்டுபேஸ்ட் – 1 டேபிள்ஸ்பூன்
பட்டை – 1 துண்டு
ஏலக்காய் -3
க்ராம்பு -4
நல்லெண்ணெய் -50g
உப்பு
செய்முறை :
1.கறியை உப்பு,மஞ்சள் தூள் போட்டு கழுவி குக்கரில் போட்டு ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்,உப்பு,மஞ்சள்தூள் போட்டு வேகவைக்கவும்.
2.தேங்காயை நறுக்கி துளி எண்ணெயில் வதக்கிவைக்கவும்.
3.தேங்காயை எடுத்து விட்டுஅதே கடாயில் தனியா,மிளகு,சீரகம், சோம்பு சேர்த்து சிவக்க வறுக்கவும்.
4.இரண்டையும் மிக்ஸியில் போட்டு மசிய அரைத்தெடுக்கவும்.
5.சின்னவெங்காயம்,கொத்துமல்லியை நறுக்கிவைக்கவும்.பச்சைமிளகாயை கீறி வைக்கவும்.
6.கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை க்ராம்பு ஏலக்காய் போட்டு பொரிந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வதங்கியபின்பு இஞ்சிபூண்டு, பொடியாக நறுக்கிய தக்காளி,பச்சைமிளகாய்,கொத்துமல்லி போட்டு வதக்கவும்.
7.நன்கு வதங்கியபின்பு வேகவைத்த கறியை போடவும் .உப்பு போடவும்.நன்கு கிளறி கொடுத்து பின் சிறிது தண்ணீர் ஊற்றவும்.நன்றாக கொதித்துவரும்போது அரைத்துவைத்த தேங்காய் கலவையை சேர்க்கவும்.
8.5 நிமிடம் நன்கு கொதிக்கவிட்டு உப்பு சரிபார்த்து இறக்கவும்.