சென்னையில் பிரியாணிக்கு தயிர்பச்சடியும்,கத்தரிக்காய் க்ரேவியும் தான் பிரபலம்.ஊர் பக்கங்களில் பிரியாணிக்கு பருப்பு தால்ச்சா தான் அதிகம் சைட்டிஷ்ஷாக பயன்படுத்தப் படுகிறது.பாய் வீட்டு கல்யாணங்களில் தவறாமல் பரிமாறப்படும் பருப்பு தால்ச்சா இது.மட்டன் போட்டு செய்யும் வகை இன்னொரு நாள் பதிவேற்றுகிறேன்.நான் செய்த அளவுகளை தந்துள்ளேன்.குறைவாக செய்ய விரும்புவோர் பருப்பு அளவுகளை குறைத்துப் போட்டு செய்யவும்.
தேவையான பொருள்கள் :
துவரம்பருப்பு – 150g
கடலைப்பருப்பு -100g
தேங்காய் – 3 கீற்று
புளி – நெல்லிக்காய் அளவு
முருங்கை -2
கத்தரிக்காய் – 1/4கி
வாழைக்காய் – 1
வெள்ளைப்பூசணி-1/4கி
கிளிமூக்கு மாங்காய் -அரை பாகம்
சின்ன வெங்காயம் – 20
தக்காளி – 2
பச்சைமிளகாய் – 6
இஞ்சி – சிறுதுண்டு
பூண்டு – 10 பல்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
கரம் மசாலாத் தூள் – சிறிதளவு
கடுகு – அரை டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
வெந்தயம் – அரைடீஸ்பூன்
ஏலக்காய் -4
பட்டை – 2துண்டுகள்
கிராம்பு – 4
கொத்துமல்லி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – 50g
செய்முறை :
1.பருப்புகளை கழுவி மஞ்சள்தூள்,2 தக்காளி சேர்த்து குக்கரில் போட்டு வேகவைத்துக் கொள்ளவும்.
2.காய்கறிகளை கழுவி நறுக்கிக் கொள்ளவும்.
3.தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.புளியை கரைத்து வைக்கவும்.
4.சின்ன வெங்காயத்தை உரித்துக்கொள்ளவும்.இஞ்சி பூண்டை இடித்துக் கொள்ளவும்.கொத்துமல்லியை நறுக்கவும்.
5.பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும் ,சீரகம், வெந்தயம்,ஏலக்காய்,பட்டை,கிராம்பு,கறிவேப்பிலை போடவும்..வெங்காயத்தை நறுக்கி போடவும்..இடித்த இஞ்சி பூண்டை சேர்த்து வதக்கவும்.பச்சை மிளகாயை சேர்க்கவும்.
6.நறுக்கிய காய்கறிகளை போட்டு மிளகாய்த்தூள்,கரம்மசாலாத்தூள்,உப்பு சேர்க்கவும்.நறுக்கிய கொத்துமல்லியை சேர்க்கவும்.சிறிது தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவிடவும்.காய் வெந்தவுடன்
புளி மற்றும் அரைத்த தேங்காயைச் சேர்க்கவும்.
7.நன்கு கொதிக்கவிட்டு பருப்பை மசித்து சேர்க்கவும்.2 நிமிடம் கொதிக்கவிட்டு உப்பு ருசி பார்த்து இறக்கவும். பருப்பு தால்ச்சா ரெடி
புலவு,நெய்சோறு,பிரியாணி,ஜீராரைஸ்,இட்லி,தோசை முதலானவைகளுக்கு சரியான சைட்டிஷ்.