அம்மாவிடம் சமையல் கற்றாலும் காலப்போக்கில் என் சமையலில் பல ஊர் சமையலின் தாக்கங்கள் தெரிவதுண்டு..ஆனால் இந்த பேஸிக் வனிலா கேக் ரெசிப்பியை மட்டும் துளியும் மாற்றவேயில்லை.. மென்மையான ஈரப்பதமுள்ள சுவையான பஞ்சு போன்ற கேக் செய்வது எப்படி என்று பார்ப்போம்.இந்த கேக்கில் சிறிதளவு வொய்ட் ரம் சேர்ப்பது வழக்கம்(சுவையும் மணமும் கூடும்).விருப்பமில்லாதவர்கள் சேர்க்க வேண்டாம்.
தேவையான பொருள்கள் :
வெண்ணெய் -500g
அரைத்த சர்க்கரை -500g
மைதா மாவு – 500g
முட்டை – 8
பேக்கிங் பவுடர் -4tsp
பால் – 200மிலி
முந்திரி – 50g
உலர்திராட்சை -50g
வனிலா எசன்ஸ் -3 டேபிள்ஸ்பூன்
வொயிட் ரம் – 50 மிலி
உப்பு – 2 சிட்டிகை
செய்முறை :
1.வெண்ணையை ப்ரிஜ்ஜிலிருந்து எடுத்து வெளியே வைக்கவும்..அறை வெப்பநிலைக்கு வந்த பின்னர் அகலமான பாத்திரத்தில் போடவும்.முந்திரிப் பருப்பை சிறுதுண்டுகளாக உடைத்துக் கொள்ளவும்.
2.8 முட்டையை உடைத்து மஞ்சள் கரு மற்றும் வெள்ளையை தனியாகப் பிரிக்கவும்.
3.அரைத்த சர்க்கரையை பாதி பாதியாகப் பிரித்துக் கொள்ளவும்.ஒரு பங்கு சர்க்கரையை வெள்ளைக்கருவோடு சேர்த்து நுரை பொங்க க்ரீம் போல வரும் வரை பீட்டரால் அடிக்கவும்.
4.இன்னொரு பங்கு அரைத்த சர்க்கரையை வெண்ணெய்யோடு சேர்த்து பீட்டரால் முழு ஸ்பீடில் பத்து நிமிடம் அடிக்கவும்.வெண்ணெய் மஞ்சள் நிறம் மாறி க்ரீம் நிறத்துக்கு வந்துவிடும்.
5.மைதாமாவில் பேக்கிங் பவுடர்,இரண்டு சிட்டிகை உப்பு கலந்து மாவு சல்லடையில் நான்கு முறை சலித்துக் கொள்ளவும்.
6.உடைத்து வைத்த முந்திரி,திராட்சையில் சிறிது மைதாமாவு போட்டு பிசறிவிடவும்.முந்திரி திராட்சை கேக் அடியில் போய் தங்கிவிடாமல் பரவலாக இருப்பதற்காக இப்படி செய்ய வேண்டும்.
7.மஞ்சள் கருவை பீட்டரால் நுரை பொங்க அடித்துக் கொள்ளவும்.
8.ஓவனை ப்ரிஹுட் மோடில் வைக்கவும்.அடித்து வைத்த வெண்ணெயில்,க்ரீம் போல அடித்த வெள்ளைக்கரு,மஞ்சள்கரு, மைதாமாவு, போட்டு மெதுவாக பிரட்டி பிரட்டிக் கொடுக்கவும்..அழுத்தி பிசையக் கூடாது.கேக் அடைந்தது போல் வரும்.
பால்,முந்திரி திராட்சை,வனிலா எசன்ஸ்,வொயிட் ரம்(ஆப்ஷனல்) எல்லாமும் போட்டு கலந்து விடவும்.கையாலேயே கலக்கலாம்.அழுத்திவிடாமல் மென்மையாகக் கலக்கவேண்டும்.
9.கேக் டின்னை எடுத்து துளி நெய் பரவலாகத் தடவி விடவும்..சிறிது மைதா மாவு போட்டு பரவலாக பரப்பிவிடவும்.
10.கேக்மாவை கேக்டின்னில் நிரப்பவும்.பாதிக்கு மேல் நிரப்பக் கூடாது.
11.250 ° யில் முப்பது நிமிடம் ஓவனை செட் செய்து கேக்டின்னை உள்ளே வைக்கவும்
12.முப்பது நிமிடம் கழிந்தவுடன் கேக்கை வெளியில் எடுத்து நடுப்பாகத்தில் மெல்லிய கத்தியை நுழைத்துப் பார்க்கவும்..கத்தி சுத்தமாக வந்தால் கேக் நன்கு வெந்து விட்டதென அறிக.
13.ஆறவிட்டு கேக்டின்னின் ஓரங்களில் கத்தியினால் கேக்கை விலக்கிவிட்டு உடையாமல் கேக்கை வெளியில் எடுத்துவிடலாம்
*அரை கிலோ வெண்ணெய்க்கு பெரிய சைஸ் கேக் மூன்று வரும்.
*முதல் முறை செய்பவர்கள் கால் கிலோ வெண்ணெய் போட்டு செய்து பார்க்கலாம்.
*OTG யில் செய்வது எனக்கு சுலபமென்பதால் அதில் செய்துள்ளேன். எந்த அவனிலும் செய்யலாம்.