கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது எங்கள் வீடுகளில் தவறாமல் செய்யப்படும் ஒரு ஸ்வீட் இந்த நெய்யுருண்டை..மிகவும் சுவையானது.செய்முறையும் எளிதுதான்.உருண்டை பிடிக்கும் போது மட்டும் சற்று கை சூடு பொறுக்க பிடிக்க வேண்டும்.
தேவையான பொருள்கள் :
பச்சரிசிமாவு – 1/4 கிலோ
அரைத்த சர்க்கரை – 150g
சிறுபருப்பு – 50g
ஏலக்காய் – 6
நெய் – 100g
செய்முறை :
1.சிறுபருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ஆறவைத்து அரைத்துக் கொள்ளவும்.
2.ஏலக்காய் தோல் நீக்கி பொடித்துக் கொள்ளவும்.
3.அடி கனமான வெறும் வாணலியில் அரிசி மாவை போட்டு வறுக்கவும்.பச்சை வாடை போகும் வரை தீயாமல் சிவக்காமல் மிதமான தீயில் வைத்து வறுக்கவும்.
4.அதிலேயே சிறுபருப்பு மாவைப் போட்டு கலந்து சற்று நேரம் கிளறவும்.ஏலக்காய்த்தூளை போட்டு கலந்து கொள்ளவும்.அரைத்த சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.
5.மாவில் நடுவே குழிபோல செய்து அங்கே நெய்யை ஊற்றவும்..நெய் உருக ஆரம்பித்தவுடன் மாவுடன் சேர்த்து கைவிடாமல் கிளறவும்.2 நிமிடம் போல கிளறினால் போதும்.
6.நெய்யும் மாவும் பரவலாகக் கலந்து வாசம் வரும்போது இறக்கி தட்டில் கொட்டி கை பொறுக்கும் சூட்டில் உருண்டை பிடிக்கவும்.
ஆறியபின் மூடி போட்ட டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.