என்னுடைய மாமியார் வீட்டு ஸ்பெஷல் இந்த குழம்பு. மிக்ஸியில் அரைத்தால் சுவை குறைந்துவிடும் என்று இன்றும் மசாலா அம்மியில் அரைத்துச் சேர்க்கிறார்கள்.நமக்கு அது கடினமென்பதால் மிக்ஸியிலேயே அரைத்துச் செய்வோம்😊.நாட்டுக்கோழி வாங்கும்போது ஒரு கிலோ அளவில் உள்ளதை வாங்க வேண்டும்.பெரிய அளவு கோழியில் கறி முற்றலாய் சக்கை போல இருக்கும்.
தேவையான பொருள்கள் :
நாட்டுக்கோழிக்கறி – அரைகிலோ
சின்ன வெங்காயம் – 20
தக்காளி – 3
தேங்காய் – 3 கீற்று
கொத்துமல்லித் தழை – சிறிதளவு
இஞ்சிபூண்டு பேஸ்ட் – 1 tsp
குழம்பு மிளகாய்த்தூள் – 3 tsp
மஞ்சள் தூள் – சிறிதளவு
சோம்பு – அரை டீஸ்பூன்
பட்டை – ஒரு துண்டு
ஏலக்காய் – 2
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 100g
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1.கறியை உப்பு வினிகர் மஞ்சள்தூள் போட்டு கழுவி குக்கரில் போடவும்.ஒரு tsp மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு போட்டு வேகவைத்து எடுத்துவைக்கவும்.
2.தேங்காயை பல்லு பல்லாக அரிந்து மிளகு சீரகத்துடன் சேர்த்து சிறிது எண்ணெயில் சிவக்க வறுக்கவும்.
3.சின்ன வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வறுத்த தேங்காய் மிளகுசீரகத்துடன் 2 ஏலக்காயைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு மையாக அரைத்து வைக்கவும்.
4.கடாயை அடுப்பிலேற்றி நல்லெண்ணெய் ஊற்றவும்.சோம்பு பட்டை போட்டு தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.வதங்கியபின் இஞ்சிபூண்டு பேஸ்ட்டைப் போட்டு 2 நிமிடம் வதக்கி தக்காளி கொத்துமல்லியைப் போட்டு தக்காளி மசியும் வரை வதக்கவும்.
5.அதில் 2 tsp மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்துக் கிளறவும்.வேகவைத்த சிக்கனை அதில் போட்டு 2 நிமிடம் கிளறவும்.சிக்கன் வெந்த தண்ணீரை சேர்க்கவும்.
6.அரைத்துவைத்த தேங்காய் கலவையைப் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்க்கவும் நன்கு கலந்துவிடவும் உப்பு சரிபார்க்கவும்.
5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கிவைக்கவும்.மணக்க மணக்க சுவையான கோழிக்குழம்பு ரெடி.
*சோறு,இட்லி,தோசை,சப்பாத்தி,நான் ரொட்டி எல்லாவற்றுக்கும் சிறப்பான சைட்டிஷ்.