சில பாடல்கள் புகைப்படங்கள் மட்டுமல்ல சில உணவுகளும் டைம்மெஷின் போல நம்மை கடந்த காலத்துக்கு இழுத்துச் செல்லக் கூடியவை.😃
என் தாய்வழிப் பாட்டியின் வீட்டில் அடிக்கடி செய்யக்கூடிய பலகாரமான உலையாப்பத்தை இன்று செய்தபோது அதை உணர முடிந்தது.
சுவையான இந்த உலையாப்பம் செய்வதற்கு எளிமையானதும் கூட.
தேவையான பொருள்கள் :
இட்லி மாவு – 1 கிலோ
வெல்லம் – 300g
தேங்காய் – ஒரு மூடி
சிறுபருப்பு – 100g
ஏலக்காய்த்தூள் – 2 சிட்டிகை
சோடா மாவு – 2 சிட்டிகை
உப்பு – 2 சிட்டிகை
செய்முறை :
1.வெல்லத்தை தூள் செய்து அடிகனமான பாத்திரத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு கரைக்கவும்.நன்கு கரைந்து கொதிக்க ஆரம்பிக்கும் போது இறக்கி ஆறவைக்கவும்.வடிகட்டியால் கல் மண் இன்றி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
2.தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.சிறுபருப்பை வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்
3.இட்லிமாவு கெட்டியாக இருத்தல் நல்லது.மாவில் சொல்லப்பட்ட அளவு உப்பு, சோடா,ஏலக்காய்த்தூள் போட்டு கலந்து கொள்ளவும்.
4.கரைத்த வைத்த வெல்லம் நன்கு ஆறியபின்னர் இட்லிமாவில் ஊற்றி கலக்கவும்.
5.இட்லிதட்டில் மாவை ஊற்றி சிறிதளவு தேங்காய்த்துருவல்,வறுத்த பருப்பு மேலே தூவவும்..(இட்லித் தட்டில் மாவு ஊற்றும் முன்னர் வேண்டுமெனில் எண்ணெய் தடவிக் கொள்ளலாம்)
5.இட்லி சட்டியில் வைத்து இட்லி அவிப்பது போல அவித்து எடுக்கவும்.
சுவையான உலை ஆப்பம் தயார்.
l
*மாவு லேசாகப் புளித்திருந்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
*மாலை நேரச் சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்றது.