சேமியா பாயாசம்,அரிசி பாயசம்,ஜவ்வரிசி பாயாசம் என்று பலவகை இருந்தாலும் பருப்பு பாயாசம் எப்போதுமே சிறப்புதான்.சிறுபருப்பும் வெல்லமும் தேங்காய்ப்பாலும் கலந்து செய்வதால் சுவையுடன் இருப்பதும் அல்லாமல் உடல்நலத்திற்கும் நல்லது.செய்வதும் எளிது.
தேவையான பொருள்கள் :
சிறுபருப்பு – 200g
ஜவ்வரிசி – 100g
வெல்லம் – 300g
தேங்காய் – ஒரு மூடி
தேங்காய் கீற்று – 3
முந்திரிபருப்பு – 15
உலர் திராட்சை -15
ஏலக்காய் – 6
நெய் – 2tsp
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை :
1.சிறுபருப்பை அடிகனமான பாத்திரத்தில் போட்டு நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
2.வறுத்த பருப்பில் தண்ணீர் ஊற்றி திறந்தவாறு நன்கு வேகவைக்கவும் (அல்லது) குக்கரில் போட்டு குழைய வேகவைக்கவும்.
3.ஜவ்வரிசியை கழுவி சிறிது நேரம் ஊறவைத்து பிறகு அடுப்பிலேற்றி திறந்த அடிகனமான பாத்திரத்தில் வேகவைக்கவும்.
4.ஒரு மூடி தேங்காயை மிக்ஸியில் அரைத்து நன்கு பிழிந்து பால் எடுத்து வைக்கவும்.
5.வெல்லத்தை உதிர் உதிராக நொறுக்கிக் கொள்ளவும்
6.உதிர்த்த வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கரையும் வரை கிண்டவும்.நன்கு கரைந்து கொதிக்க ஆரம்பிக்கும் போது இறக்கி கல் மண் இன்றி வடிகட்டி வைக்கவும்
7.மூன்று கீற்று தேங்காயை பொடியாக பல்லு பல்லாக நறுக்கி 2tsp நெய்விட்டு வறுக்கவும்.தேங்காய் சிவக்க ஆரம்பித்தவுடன் முந்திரி திராட்சையை அதிலேயே போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்
8.அகலமான அடிகனமான பாத்திரத்தில் பருப்பு,வெல்லக்கரைசல்,தேங்காய்ப்பால்,வறுத்த தேங்காய் முந்திரி திராட்சை துண்டுகளை போடவும்.ஏலக்காய்களை பொடி செய்து சேர்க்கவும். சிட்டிகை உப்பு சேர்க்கவும்.அடுப்பிலேற்றி பாயாசம் தளதளவென்று கொதித்து வரும்போது இறக்கிவிடவும்.