மகன்கள் சின்னப்பிள்ளையாருக்கும் போது காய் பொரியல் எல்லாம் சாப்பிட வைப்பது பெரும்பாடு.அப்போது ஒருமுறை இந்த முறையில் கூட்டு செய்த போது விருப்பமாக சாப்பிட்டார்கள்..
இன்றும் குழம்பு என்னடா வைக்கலாம் என்றால் இந்த கூட்டு பெயரைத்தான் சொல்லுவார்கள்.
பீர்க்கங்காய்,புடலங்காய்,வெள்ளைப் பூசணிக்காய்,பெரிய வெள்ளரிக் காய்,செளசெள முதலான காய்கறிகளிலும் இந்த கூட்டு செய்யலாம்.
சோற்றில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்..டயட் பண்ண வேண்டாத அதிர்ஷ்டக் காரர்கள் துளி நெய் சேர்த்துப் பிசையலாம்.😁
சப்பாத்தி,தோசையுடனும் ஃபிட்டாகும்.
தேவையான பொருள்கள் :
பிஞ்சு சுரைக்காய் -1
சிறுபருப்பு – 100
பெரியவெங்காயம் – 1
சின்ன தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
காய்ந்த மிளகாய் – 1
கடுகு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிது
மஞ்சள் தூள் -சிறிதளவு
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
அரைக்க வேண்டியவை :
தேங்காய் – 2 பெரிய கீற்று
கடலைப்பருப்பு – 1 1/2tsp
தனியா விதை – 2 tsp
காய்ந்த மிளகாய் -6
செய்முறை :
1.சுரைக்காயை தோல்சீவி விதைப்பகுதியை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
2.சிறுபருப்பை திறந்த அடிகனமான பாத்திரத்தில் பெருங்காயம் மஞ்சள் தூள் சேர்த்து மலர வேகவைத்துக் கொள்ளவும்.
3.அரைக்க வேண்டிய பொருள்களை அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வாசம் வரும் வறுத்து எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்து எடுக்கவும்.
4.கடாயில் ஒரு tsp எண்ணெய் ஊற்றி கடுகு, ஒரு காய்ந்த மிளகாய் தாளித்து வெங்காயம் பச்சைமிளகாய் தக்காளி பொடியாக நறுக்கி சேர்க்கவும்.அரிந்த வைத்த சுரைக்காயை அதில் சேர்த்து மஞ்சள் தூள் உப்பு போட்டு அரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவைக்கவும்
5.சுரைக்காய் நன்கு வெந்தவுடன் மத்து கொண்டு சற்று கடைந்துவிட்டு வேகவைத்த பருப்பை சேர்க்கவும்
6.அரைத்துவைத்த தேங்காய் மசாலா விழுதை சேர்க்கவும்.
7.சிறிது தண்ணீர் ஊற்றி கலந்துவிட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
சுவையான சுரைக்காய் கூட்டு ரெடி.😊